தமிழக அரசு நடப்புக் கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆங்கில வழி வகுப்புகளைத் தொடங்குகிறது. இத்திட்டதைக் கைவிட வலியுறுத்தி தமிழக அரசுக்கு விண்ணப்பம் கொடுக்கும் கோரிக்கைப் பேரணி கோட்டையை நோக்கி 07.08.2013 அன்று சென்னையில் நடைபெறுகிறது. இது குறித்து இன்று (05.08.2013) காலை 11.00 மணிக்கு இதழாளர் மன்றத்தில் செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவரும் தமிழ்வழிக் கல்விக் கூட்டியிக்க ஒருகிணைப்பாளருமான தோழர் பெ.மணியரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் திரு வேல்முருகன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்தியா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் துணைத் தலைவர் குணங்குடி அனிபா, மே பதினேழு இயக்கத்தின் ஒருகிணைப்பாளர் திருமுருகன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைநிலையச் செயலாளர் தோழர் தபசிகுமரன், தமிழ்நாடு மக்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அருண்சோரி, தமிழ் உரிமை மீட்பு இயக்கச் செயலாளர் சின்னப்பதமிழர், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவின் பொதுச் செயலாளர் திரு சைதை சிவராமன், அக்கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், சண்முகம் உள்ளிட்டோர் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
அப்போது தோழர் பெ.மணியரசன் சென்னைப் பேரணி பற்றி கூறியதாவது :
தமிழக அரசின் ஆங்கிலத்திணிப்புத் திட்டம் முழுமையாக நிறைவேறினால் மேல் நிலைப் பள்ளி வரை உள்ள கல்வியிலிருந்து தமிழ் மொழி வெளியேற்றப் பட்டு விடும். தமிழ் மொழியின் பயன்பாட்டு தேவை இல்லாத போது காலப்போக்கில் தமிழ்மொழி மங்கிமறைந்து விடும் அபாயம் உள்ளது.
தங்கள் தாய் மொழியாகிய தமிழை இழந்த பிறகு சொந்த மண்ணில் தமிழர்கள் இரண்டாந்தர மக்களாக மாறி விடுவார்கள். எனவே தமிழ் மொழிக் கல்வியைக் கைவிட்டு ஆங்கில வழிக் கல்வியை திணிக்கும் தமிழக அரசின் முயற்சியை தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டிய தேவை உள்ளது.
பெற்றோர்கள் ஆங்கில வழி மெட்ரிகுலேசன் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை அதிகமாகச் சேர்க்கிறார்கள். இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்கை குறைகிறது என்று காரணம் கூறி தமிழக அரசு ஆங்கில வழி வகுப்புகளைத் தொடங்குகிறது. இந்தக் குறையைப் போக்கத் தமிழக அரசு தனது பள்ளிகளில் உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் தூய்மையான கழிப்பறை வசதி, விளையாட்டுத்திடல், வகுப்பு அறைகள், ஓவியம், விளையாட்டு, இசை ஆகியவற்றிற்குத் தனித் தனி ஆசிரியர்கள் என உள் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.
+2 வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்விச் சேர்க்கையில் 80 விழுக்காடு ஒதுக்கீடு செய்து சட்டமியற்ற வேண்டும். இவ்வாறான கோரிக்கைகளை தமிழக அரசு செயல்படுத்தினால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் ஆவலோடு சேர்ப்பார்கள்.
ஆங்கிலத்தை மொழிப்பாடமாகக் கற்றுத்தருவதைத் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் ஆதரிக்கிறது. மாறாக அறிவியல், கணிதம், வரலாறு, வணிகவியல் போன்ற எல்லாப் பாடங்களையும் ஆங்கில மொழி மூலம் கற்றுத் தருவதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம்.
மேற்கண்ட கோரிக்கைகள் கொண்ட விண்ணப்பத்தைத் தமிழக முதல்வரிடம் அளிப்பதற்காக 07.08.2013 புதன் காலை 10.00 மணிக்கு சென்னை தீவுத்திடல் அருகே உள்ள மன்றோ சிலையிலிருந்து கோட்டையை நோக்கிப் பேரணி புறப்படுகிறது. இதில் கலந்து கொள்ளத் தமிழகம் முழுவதுமிருந்து தமிழின உணர்வாளர்களும் கல்வி வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்களும் திரளாக வருகிறார்கள் என்று தோழர் பெ.மணியரசன் கூறினார். அபோது செய்தியாளர் ஒருவர் நீங்கள் சொல்வதைக் கேட்டால் தமிழக மாணவர்களுக்கு ஆங்கில அறிவு வளராமல் போய்விடுமே என்றார். அதற்கு தோழர் பெ.மணியரசன் , “ஆங்கிலத்தைத் தொடக்கப் பள்ளியிலிருந்து கல்லூரிப் படிப்பு வரை மொழிப் பாடமாகக் கற்பது தமிழ்நாட்டில் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. மாணவர்கள் ஷேக்ஸ்பியரைப் படிக்கிறார்கள், மில்டனைப் படிக்கிறார்கள், ஆங்கில இலக்கியத்தைப் படிக்கிறார்கள். அத்தனைக்குப் பிறகும் ஆங்கிலத்தில் மாணவர்கள் திறமை பெறவில்லை என்றால் சொல்லிக் கொடுப்பதில் கோளாறு இருப்பதாகத்தான் பொருள். அந்தக் குறையைப் போக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது என்றார்.
(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள் : வெற்றித் தமிழன்)
09840848594,09047162164

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக